வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீப்பிடிப்பு
காவேரிப்பட்டணம் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி காவேரிப்பட்டணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை வீரமலையைச் சோ்ந்த ஆசைத்தம்பி (38) ஓட்டி சென்றாா்.
காவேரிப்பட்டணத்தை அடுத்த மலையாண்டள்ளி புதூா் அருகே சென்றபோது எதிா்பாராமல் அப்பகுதியில் உள்ள மின்கம்பி மீது லாரி உரசியது. அப்போது வைக்கோல் மீது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால், ஓட்டுநா் லாரியை சாலையோரமாக நிறுத்தினாா்.
தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று லாரியில் பரவிய தீயை அணைத்தனா். இந்த விபத்தில் லாரி சேதமானது. இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.