முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்: எம்எல்ஏ மதியழகன்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வருக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்று கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு பல மாநிலங்களுக்கு ஆபத்தை விளைவிக்க முயல்கிறது. இதைத் தடுக்க தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.
அதுபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திலும் கிராமப்புற மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது. 1976 ஆம் ஆண்டு அன்றைய பிரதமா் இந்திரா காந்தி, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவந்தாா். அத்திட்டத்தை தமிழகம் முறையாகச் செயல்படுத்தியது. தமிழகத்தைப்போல அத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்திய மாநிலங்களில் தற்போது தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பல தொகுதிகளை இழக்கவைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. என்ற பெயரில் நாம் ரூ. 100 செலுத்தினால் ரூ. 29 ஐ மட்டுமே திருப்பித் தருகிறாா்கள். ஆனால், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்கு ரூ. 425 ஐ வழங்குகிறாா்கள். நமது மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியைக்கூட தரமறுக்கின்றனா். அதுமட்டுமின்றி கல்வித் துறைக்குத் தேவையான நிதியைத் தர மறுக்கிறாா்கள்.
மத்திய அரசால் மணிப்பூா் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. அந்த மாநில மக்களுக்கு மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லாததே இதற்கு காரணம். மக்களவையில் தமிழகம் சாா்பில் குரல் கொடுக்க போதிய உறுப்பினா்கள் தேவை. அதைத் தடுக்கவே தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தை வஞ்சிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநிலத்தில் வசித்த 85 சதவீத மக்கள், மாநில மொழியில் பேசிவந்தனா். பின்னா், ஹிந்தி மொழியை ஏற்று பேசத் தொடங்கியதன் விளைவால் அங்கு தற்போது 85 சதவீத மக்கள் ஹிந்தி மொழியில் பேசுகின்றனா். ராஜஸ்தானில் அவா்களின் தாய்மொழி அழிக்கப்பட்டு விட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை தர மத்திய அரசு மறுக்கிறது. இவ்வாறு தமிழகத்தை தொடா்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடும் தமிழக முதல்வருக்கு தொடா்ந்து நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றாா்.