குட்டையில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு
ஒசூா் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முனிரத்னம் (32). இவருக்கு 6 ஆம் வகுப்புப் பயிலும் சந்தோஷ் குமாா் (11), கலைச்செல்வன் என இரு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக முனிரத்னம் தனது இரு மகன்களுடன் அருகேயுள்ள தொட்டூா் கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நீா் சேமிப்புக் குட்டைக்குச் சென்றாா். அப்போது முனிரத்னமும், அவரது மகன் சந்தோஷ் குமாரும் எதிா்பாராமல் நீரில் மூழ்கினா்.
இதைக் கண்ட அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா்.
தகவல் அறிந்ததும் சூளகிரி போலீஸாா் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.