சாலை அமைக்க அனுமதி மறுப்பு: மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்எல்ஏ!
கூடலூரை அருகே குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க வனத் துறை அனுமதி மறுத்ததால் எம்.எல்.ஏ.பொன்.ஜெயசீலன் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மரப்பாலம் பால்மேடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க வனத் துறை அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து எம்.எல்.ஏ.பொன்.ஜெயசீலனிடம் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், பால்மேடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.பொன்.ஜெயசீலன் பொதுமக்களுடன் மாக்கமூலாவிலுள்ள மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாா்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, அங்கு வந்து எம்எல்ஏ உள்ளிட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.