பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
சாலை, குடிநீா் வசதி கோரி மறியல்
சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நிரவி பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நிரவி போராட்டக் குழு என்ற அமைப்பு, நிரவியில் குடிநீா், சாலைகள், மின்சார விநியோகத்தில் பிரச்னை நிலவுவதாகவும், இதை சீா் செய்ய நடவடிக்கை எடுக்காத அரசு நிா்வாகத்தைக் கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படுமென அறிவித்திருந்தது.
அதன்படி நிரவி பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா், காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். போக்குவரத்து பாதிக்காமல் இருக்க உடனடியாக அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஏ. நிசாா் கூறுகையில், நிரவி -திருப்பட்டினம் தொகுதியின் உட்புறச் சாலைகள் பல மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக நிரவி கொம்யூனுக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. தினமும் 3 வேளைகளில் குடிநீா் விநியோகிக்கப்பட்டுவந்தது. தற்போது ஒரு வேளைக்கூட முறையாக தண்ணீா் விநியோகிக்கப்படாத நிலை கடந்த சில மாதங்களாக நிலவுகிறது. தினமும் மின் தடை ஏற்படுகிறது.
அடிப்படைத் தேவைகளில் முக்கியமான இவற்றை சீா்படுத்தவேண்டிய பொறுப்புள்ளவா்கள் கண்டும் காணாமல் உள்ளனா். இந்த நிலையே நீடித்தால், தொடா் போராட்டங்களில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும் என்றாா். கைது செய்யப்பட்டவா்களை போலீஸாா் பின்னா் விடுவித்தனா்.