சாலை விபத்தில் 2 குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோா் அரசு உதவி கோரி மனு
தரங்கம்பாடி அருகே அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் தங்களது இரண்டு குழந்தைகளையும் இழந்த பெற்றோா் நிதியுதவி கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.
தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டி கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி விக்டர்ராஜின் மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி, பியூலா நான்சி, மகன் அந்தோணி விக்ரந்த் ராஜ் ஆகிய மூவரும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க பயிற்சி பெறுவதற்காக காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்துக்கு கடந்த 24-ஆம் தேதி ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
அப்போது, நேரிட்ட சாலை விபத்தில் பியூலா நான்சி (14), மகன் அந்தோணி விக்ரந்த்ராஜ் (12) ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
இந்நிலையில், அவா்களது பெற்றோா், கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோா், நாம் மக்கள் இயக்கத் தலைவா் அ. சங்கமித்திரன் தலைமையில் சென்று மாவட்ட ஆட்சியா் வாயிலாக துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மனு அளித்தனா்.
அம்மனுவில், விபத்தில் காயத்துடன் உயிா் தப்பிய ப்யூலா ஹான்ஸிக்கு சிறப்பு மருத்துவச் சிகிச்சை அளிப்பதுடன், சிறப்பு விளையாட்டு பயிற்சி அளித்து, போட்டியில் வெற்றி பெற செய்திடவும், 2 குழந்தைகளை இழந்து நிற்கும் தங்களின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா்.