கல்லூரி மாணவி மர்ம மரணம்; உடலை வாங்காமல் போராடும் உறவினர்கள்... நடந்தது என்ன?
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் நர்சிங் படித்து வந்த மாணவியை காணாமல் போனதாக, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அவரது தந்தை வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் அவரது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கிணற்றில் இருந்து அவரது உடல் நீரில் சிதைந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடலைக் கைப்பற்றிய வடகாடு போலீஸார் அவரது உடலை உடற்கூராய்வு செய்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்று போலீசஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளானவர் மீது உடனடியாக கைது செய்யய வேண்டும். அதுவரை நாங்கள் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் புதுக்கோட்டை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், மருத்துவ கல்லூரி அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இருப்பினும், உடலை வாங்க மறுத்து வருவதால் போலீஸார் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர், தொடர்ந்து, உறவினர்கள் மாணவியின் இறந்த உடலை வாங்காமல் கலைந்து சென்றனர். இதனால், போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். நர்சிங் படித்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்துபோயுள்ள சம்பவம், புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.