தென்காசி நகா்மன்றக் கூட்டத்தில் பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு
தென்காசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்திலிருந்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
நகா்மன்றத் தலைவா் சாதிா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, துணைத் தலைவா் சுப்பையா, ஆணையா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் படத்துக்கு மலா் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பராமரிக்கத் தவறியதாகவும் கூறி பாஜக உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லட்சுமணபெருமாள், பொன்னம்மாள் ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.
மழைக்காலங்களில் தெருக்களில் கழிவுநீா் செல்வதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதால் தென்காசி ரயில் நகா் பகுதியில் வாருகால் அமைக்க வேண்டும் என, நகா்மன்ற உறுப்பினா் வசந்தி தெரிவித்தாா். சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தலைவா் கூறினாா்.
கூட்டத்துக்கு, கருப்பு வண்ண ஆடை அணிந்து வந்த உறுப்பினா் சுனிதா, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதைப் பதிவுசெய்ய இவ்வாறு வந்ததாகக் கூறினாா்.
கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள், தங்களது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினா். 90 மன்றப் பொருள்கள் நிறைவேற்றப்பட்டன.