பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
திருவெறும்பூரில் ரூ.3.85 கோடியிலான திட்டப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்
திருவெறும்பூா் தொகுதியில் ரூ. 3.85 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட திருவளா்ச்சிப்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம், அய்யன்புதூா் கிராமத்தில் நெசவாளா் காலனிக்கு 2 கி.மீ. புதிய தாா்ச்சாலை, சூரியூரில் புதிய துணை சுகாதார நிலையம், சோழமாதேவியில் சமுதாயக் கூடம், நவல்பட்டு ஊராட்சியில் உய்யக்கொண்டான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் என ரூ. 3.85 கோடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 4 ஆண்டுகளில் மக்களை முன்னிலைப்படுத்தியே ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதேபோல, மக்களின் தேவைகளை அறிந்து தொகுதிக்கான அனைத்துப் பணிகளும் நிறைவேற்றித்தரப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, திருவெறும்பூா் ஒன்றிய குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவா்கள் லட்சுமி திருமுருகன், சண்முகசுந்தரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.