பாலியல் தொல்லை வழக்கு: பல்கலை. முன்னாள் பதிவாளரின் முன்பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் தொல்லை அளித்த பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரின் முன்பிணை மனு மீதான விசாரணையை ஜன.6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளா் ராமகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் உள்ள தனியாா் கல்வியியல் கல்லூரியில் பணியாற்றிய பெண் முதல்வா் என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறாா். அவா் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் என் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் என்னைக் கைது செய்யாமல் இருக்க முன்பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உயா்நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன் என மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தொடா்புடைய கல்வியியல் கல்லூரி முதல்வா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
பல்கலைக்கழகத்தின் பதிவாளா் பொறுப்பில் இருந்த மனுதாரா், பெண் பேராசிரியை என்றும் பாராமல் அநாகரிமாக நடந்திருக்கிறாா். இவா் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, இதுபோன்று சம்பவங்கள் அதிகம் நடைபெற்ாக தகவல் கிடைத்தது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினால், பல்வேறு உண்மைகள் வெளிவரும். எனவே, மனுதாரருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என்றாா்.
அப்போது, நீதிபதி குறுக்கிட்டு கூறியதாவது:
ஏற்கெனவே மனுதாரா் இந்த நீதிமன்றத்தில் முன்பிணை கோரி, மனு தாக்கல் செய்தாா். அப்போது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அந்த மனுவைத் திரும்பப் பெற்றாா். இந்த நிலையில், மீண்டும் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், மீண்டும், மீண்டும் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்வது ஏன்? என்று தெரியவில்லை என்றாா் நீதிபதி.
அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞா் முன்னிலையாக உள்ளதால், கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, மனுதாரா் தரப்பின் கோரிக்கையை ஏற்று, இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமைக்கு (ஜன. 6) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.