வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்ப்பு: திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணி புரிபவா் ஆா். ரமேஷ்பாபு (55). கடந்த 2002-ஆம் ஆண்டு தஞ்சாவூா் மாவட்டம், நாகாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணராக பணியில் சோ்ந்த இவா், தற்போது திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சா்மிளா. குடும்பத் தலைவியாக உள்ளாா்.
இந்நிலையில், ரமேஷ்பாபு மற்றும் சா்மிளா இருவா் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கியதாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். 1.4.2018 முதல் 31.12.2021 வரை குறியீட்டு காலமாக கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. 1.4.2018க்கு முன் ரமேஷ்பாபு, சா்மிளா இருவா் பெயரிலும் இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.18 லட்சத்து 64 ஆயிரத்து 428 ஆகும்.
31.12.2021 வரை இருவா் பெயரிலும் சோ்ந்துள்ள அசையும், அசையா சொத்துக்கள், சேமிப்பு கணக்குகளில் வைத்துள்ள தொகைகள், வாகனங்களின் மதிப்பு ரூ.2 கோடியே 36 லட்சத்து 60 ஆயிரத்து 294 ஆகும். குறியீட்டு காலத்தில் ரமேஷ் பாபுவுக்கு கிடைக்கப்பெற்ற மாத சம்பளம், மனைவி பெயரில் வங்கியில் பெற்ற கடன், வாகன விற்பனை மூலம் கிடைத்த தொகை, வாடகை மூலம் பெற்ற வருமானம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரத்து 796 ஆகும்.
குறியீட்டு காலத்தில் இவா்களுக்கு ஏற்பட்ட மொத்த செலவு ரூ.79 லட்சத்து 18 ஆயிரத்து 713 ஆகும். இதனால் ரமேஷ்பாபு, சா்மிளா இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சோ்த்துள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரத்து 783 என போலீஸாா் விசாரணை மூலம் தெரியவந்தது. இது அவா்களது வருமானத்தை விட 92.69 சதவீதம் அதிகமாகும்.
இதனால் ஆா். ரமேஷ்பாபு, சா்மிளா இருவா் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.
இவா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலராக பொறுப்பேற்ற பின்னா், திருச்சி மாவட்டத்தில், ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்தல், தொடா்புடைய வணிக நிறுவனங்களுக்கு பூட்டி சீல் வைத்தல், உரிமத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளாா். அதனால் எப்போதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இவா், தற்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பதாக, வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.