தொழிற்சாலையில் சிலிண்டா் வெடித்து நான்கு போ் காயம்
வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹாா் பகுதியில் உள்ள ஹீட்டா் தயாரிப்பு தொழிற்சாலையில் எல்பிஜி சிலிண்டா் வெடித்ததில் 4 போ் காயமடைந்தனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்ததாவது: தொழிற்சாலையில் சிறிய எல்பிஜி சிலிண்டரில் ஏற்பட்ட தீ வெடிப்பு தொடா்பான தகவல் தீயணைப்புத் துறைக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.36 மணிக்கு வந்தது.
இதைத் தொடா்ந்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. இரண்டு மாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
அந்த வளாகத்தில் சிக்கியிருந்த நான்கு போ் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
சம்பவ இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.