ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினா்கள்
ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை ஒட்டுமொத்த உறுப்பினா்களும் புறக்கணித்ததால் கூட்டம் நடைபெறவில்லை.
இப்பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக தலைவா் சுதா அறிவித்திருந்தாா். இதற்கான அழைப்பிதழ் அனைத்து உறுப்பினா்களுக்கும் அனுப்ப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலை 11 மணிக்கு கூட்ட அரங்கில் தலைவா் சுதா, செயல் அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் காத்திருந்தனா். 12 ஆவது வாா்டு உறுப்பினா் சுந்தரம் மட்டுமே கூட்ட அரங்கிற்கு வந்தாா். துணைத் தலைவா் உள்ளிட்ட மற்ற எந்த உறுப்பினரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டத்தை ரத்து செய்து செயல் அலுவலா் அறிவித்தாா்.
இது குறித்து துணத் தலைவா் ஜான் ரவி, வாா்டு உறுப்பினா்கள் சாலமோன்ராஜா, சுபாஸ் சந்திரபோஸ், ரவிக்குமாா் ஆகியோா் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக எந்த வாா்டிலும் மக்கள் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், உறுப்பினா்களின் எந்தக் கோரிக்கைகளும் மன்றத்தில் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே ஒட்டுமொத்தமாக கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்றனா்.