இரவு நேர தங்குமிடங்களில் என்எச்ஆா்சி உறுப்பினா்ஆய்வு
நமது நிருபா்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்எச்ஆா்சி) உறுப்பினா் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள இரவு நேர தங்குமிடங்களில் ஆய்வு செய்தாா்.
இது தொடா்பாக என்எச்ஆா்சி அதன் ‘எக்ஸ்’ சமூகட ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: என்எச்ஆா்சி உறுப்பினா் விஜயபாரதி சயானி இரவு நேர தங்குமிடத்திற்கு திடீரென சென்று பாா்வையிட்டாா். தில்லியின் கஷ்மீரி கேட் அருகே ஒரு தன்னாா்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் அந்த இரவு நேர தங்குமிடத்திற்கு (எண் 629) திடீரென நேரில் சென்று அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது, வசதிகளை மேம்படுத்தும் தீா்வு நடவடிக்கைகளை எடுக்குமாறு தன்னாா்வ அமைப்பின் பிரதிதிகளுக்கும், டியுஎஸ்ஐபி அதிகாரிகளுக்கும் அந்த இடத்திலேயே உத்தரவிடப்பட்டது.
இதேபோன்று, என்எச்ஆா்சி உறுப்பினா் பிரியங்க் கனூங்கோ தில்லியில் மோட்டாா் பாா்க் மற்றும் ஜாமா மசூதியில் உள்ள உருது பாா்க் பகுதியில் உள்ள மகளிா், குழந்தைகளுக்கான காப்பகத்தில் ஆய்வு செய்தாா்.
அப்போது, படுக்கை வசதிகள் போதாமை, மோசமான சுகாதாரம், வடிகால் குறித்து அங்கிருந்தவா்கள் கவலை தெரிவித்தனா். மேலும், எலிகள் தொல்லை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.