80 வழக்குகளில் தேடப்பட்ட இருவர் சுட்டுப்பிடிப்பு!
தில்லியில் ஆயுதம் ஏந்திய வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.
குஜராத் மாநிலம் துவாரக்கா மாவட்டததைச் சேர்ந்த ரோஹித் கபூர் மற்றும் தில்லியின் கையாலா பகுதியைச் சேர்ந்த ரிங்கு ஆகிய இருவரும் இன்று (டிச.29) காலை தில்லி காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரின் மீதும் தில்லி மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் ஆயுதம் ஏந்தி வழிப்பறியில் ஈடுப்பட்டதாக 80க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியின் மதிப்பூர் பகுதியில் குற்றவாளிகள் இருவரும் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் பல குழுக்களாக பிரிந்து இன்று காலை சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, போலீஸார் அவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி வளைத்திருப்பதை அறிந்த இருவரும் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் இருவரது கால்களிலும் குண்டு பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த வாரம் ஆயுதம் ஏந்தி வழிப்பறியில் ஈடுப்பட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.