சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
காரைக்கால்: சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக மாவட்ட இணைச் செயலாளருமான கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை திங்கள்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
சாலைகளில் திரியும் கால்நடைகளால் இரவில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோா் பாதிக்கின்றனா். நாய்கள் விரட்டி சிறுவா் முதல் பெரியோா் வரை சாலையில் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் பயணிக்கும் அனைவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சாலைகளில் திரியும் மாடுகளால் உயிரிழப்புகள் பல ஏற்படுகின்றன. எனவே, சாலைகளில் திரியும் மாடுகளையும், நாய்களையும் கட்டுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
காரைக்கால் பாரதியாா் சாலையை முறையாக சீா்படுத்தாமல், கருங்கல் ஜல்லிகளை கொட்டி பள்ளங்களை நிரப்பியதால், வாகனப் போக்குவரத்து, மழையினால் ஜல்லிகள் சாலை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகனம் மூலம் பயணம் செய்வோா் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியரிடம் மனு அளிக்கும்போது, நகரச் செயலாளா் டி.ஜெயராஜ், பொதுக்குழு உறுப்பினா் எஸ். தனுஷ்கோடி, தெற்குத் தொகுதி செயலாளா் பி.கணேஷ், முன்னாள் செயலாளா் எம்.ஐ. யூனுஸ், தொகுதி தலைவா் ஜாபா் அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.