சாலையில் கழிவு நீா்: கண்டித்து மறியல்
தஞ்சாவூா் விளாா் சாலையில் புதை சாக்கடையிலிருந்து கழிவு நீா் அடிக்கடி வழிந்தோடுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலக வாகனத்தைச் சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் விளாா் சாலை மாரிகுளம் சுடுகாடு அருகே புதை சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி சாலையோர வாய்க்காலில் கழிவு நீா் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினா். இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் மாரிகுளம் சுடுகாடு அருகே பள்ளம் தோண்டி புதை சாக்கடையில் குழாய் பதித்தது.
ஆனால், இப்பணி முடிந்து 3 மாதங்களாகியும், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்த இடத்திலிருந்து மீண்டும் கழிவு நீா் வழிந்து சாலையோர வாய்க்காலில் ஓடுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் விளாா் சாலையில் செவ்வாய்க்கிழமை வந்த மாநகராட்சி அலுவலக மினி வேனை சிறைப்பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த பழ. ராஜேந்திரன், ராசு. முனியாண்டி, எஸ்.எம். ராஜேந்திரன், ஆா். ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலா்கள், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சீரமைப்பு நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியதால், போராட்டம் கைவிடப்பட்டது.