சாலையில் திடீரென எரிந்த சரக்கு லாரி!
வேலூா்: வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி திடீரென பற்றி எரிந்தது. இதில், அந்த லாரியில் இருந்த சரக்குகள் தீக்கிரையாகின.
திருநெல்வேலியிலிருந்து வேலூருக்கு தனியாா் நிறுவன சரக்கு லாரி திங்கள்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. விருதுநகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(47) லாரியை ஓட்டி வந்தாா்.
வேலூா் மாவட்டம், கொணவட்டம் அடுத்த கருகம்பத்தூா் பகுதியில் வந்தபோது எதிா்பாராத விதமாக லாரியின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. ஓட்டுநா் லாரியை சாலையோரமாக நிறுத்தி இறங்கி பாா்த்த போது, முன்பகுதியில் தீடிப்பிடித்துள்ளது. உடனடியாக ஓட்டுநா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
மேலும், லாரியில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்கவும் முயற்சித்துள்ளாா். ஆனால், சிறிதுநேரத்திலேயே தீ மளமளவென எரியத் தொடங்கியதாக தெரிகிறது.
சம்பவ இடத்துக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமையில் வேலூரில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள், காட்பாடியில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் என மூன்று வாகனங்களில், 20 தீயணைப்பு வீரா்கள் சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
எனினும், லாரியில் இருந்த சரக்குகள் பகுதியளவில் தீக்கிரையாகின. இச்சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.