சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
சீா்காழியில் பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சீா்காழியில் பிரதான பகுதிகளான கடைவீதி, மணிக்கூண்டு பகுதி, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தென்பாதி , காமராஜா் வீதி, தோ் வடக்கு வீதி, தெற்கு வீதி, அரசு மருத்துவமனை சாலை, சாமிநாதா் செட்டி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். இருசக்கர வாகனத்தில் செல்வோா், நாய்களால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நேரிடுகிறது.
இதேபோல், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளாலும் விபத்து நிகழ்கிறது. ஆகையால், சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.