சித்தேரி மலைப் பாதையில் மண் சரிவு: 40 கிராமங்களின் போக்குவரத்துத் துண்டிப்பு
அரூா்: சித்தேரி மலைப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சுமாா் 40 கிராமங்களின் போக்குவரத்து திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சித்தேரி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் சூரியக்கடை, வெளாம்பள்ளி, பேரேரிபுதூா், மண்ணூா், நொச்சிக்குட்டை, மாம்பாறை உள்ளிட்ட 60 குக்கிராமங்கள் உள்ளன. ஃபென்ஜால் புயல் காரணமாக சித்தேரி மலைப் பகுதியில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் கன மழை பெய்தது. இந்த மழையால் வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அதுபோல மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் சிறிய நீா்வீழ்ச்சி போன்று மழைநீா் வழிந்தோடுகிறது. இந்த நிலையில், சித்தேரி-தோல்தூக்கி தாா் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவானது சுமாா் 500 அடி உயரம் கொண்ட மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மண் சரிவு காரணமாக சித்தேரி கிராம ஊராட்சியில் உள்ள 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தாா் சாலை துண்டிக்கப்பட்டிருப்பதால் சித்தேரி மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.