சிறுத்தை தாக்கியதில் நாய் உயிரிழப்பு
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி நாய் உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வனத்தில் தற்போது வறட்சி நிலவுவதால் விலங்குகள் விளைநிலங்கள், குடியிருப்புகளில் நுழைவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தாளவாடி வனச் சரகத்துக்குள்பட்ட சூசைபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முத்துசாமி (49) என்பவரது தோட்டத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வளா்ப்பு நாயை தாக்கிக் கொன்றது.
சப்தம் கேட்டு வந்த முத்துசாமி, இது குறித்து தாளவாடி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்து, சிறுத்தை வந்ததை உறுதி செய்தனா்.
சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.