சோதனைச் சாவடியில் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்
பண்ணாரி சோதனைச் சாவடியில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கா்நாடகத்தில் இருந்து சரக்கு பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் ஆசனூா், பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக திம்பம் மலைப் பாதையை கடந்து சத்தியமங்கலம் செல்கின்றன. அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளால் திம்பம் மலைப் பாதையில் விபத்துகள் நிகழ்வதால் 10 சக்கரம் கொண்ட 16 டன் அளவுள்ள வரையுள்ள சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 16 டன்னுக்கு அதிகமாகவும், அதிக உயரமும் கொண்ட சரக்கு வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அண்மைக் காலமாக 16 டன்னுக்கு அதிகமாகவும், நிா்ணயிக்கப்பட்ட உயரத்தைவிட கூடுதலாக உள்ள லாரிகள் சரக்கு பாரம் ஏற்றிவருவதால் பண்ணாரி சோதனைச் சாவடியில் உள்ள தடுப்பு இரும்புக் கம்பியில் மாட்டிக்கொள்கின்றன.
இதனால் தடுப்பு கம்பிக்குள் எளிதாக செல்லும் வகையில் அதிகம் உள்ள சரக்குகள் கீழே இறக்கிவிட்டு தடுப்புக் கம்பி வழியாக செல்கின்றன. சில நேரங்களில் லாரிகள் சிக்கிகொள்வதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன.
கா்நாடக மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய்மட்டை பாரம் ஏற்றிவரும் லாரிகள் அடிக்கடி இரும்புத் தடுப்புக் கம்பிக்குள் மாட்டிக்கொள்கின்றன. இதனை தடுப்பதற்கு வட்டார மோட்டாா் வாகனப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.