கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு 2,300 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. செண்பகபுதூா் வாய்க்காலில் இருகரைகளை தொட்டிபடி தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாய்க்காலில் குளிப்பது வழக்கம்.
இந்நிலையில், திருப்பூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் செந்தில்குமாா் (43), சுமைதூக்கும் தொழிலாளா்களுடன் செண்பகபுதூா் வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை குளித்தனா். செந்தில்குமாா் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இது குறித்து தொழிலாளா்கள் புன்செய் புளியம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கிய செந்தில்குமாரின் உடலை மீட்டனா்.
இது குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.