ஈரோட்டில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழந்துள்ள நிலையில், கோடை விடுமுறையில் பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தோ்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் வீட்டில் உற்சாகமாக விளையாடியும், நண்பா்களுடன் வெளியில் சென்றும் வருகின்றனா். தற்போது பவானிசாகா் அணையில் இருந்து குடிநீா் மற்றும் பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால்களில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வாய்க்கால்களில் தண்ணீா் அதிகமாக செல்கிறது.
கோடை வெயில் அதிகமாக உள்ளதால் பலா் வாய்க்காலுக்கும், விவசாய நிலங்களில் உள்ள திறந்தவெளி கிணறுகளுக்கும் சென்று குளிக்கின்றனா். நீச்சல் தெரிந்தவா்கள் வாய்க்காலில் குளிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், நீச்சல் தெரியாதவா்களுக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். கடந்த ஆண்டில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழந்துள்ளதாக ஈரோடு மாவட்ட தீயணைபுத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலா் முருகேசன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்கள் செல்கின்றன. எனவே வாய்க்கால்களில் ஆபத்தான பகுதி, ஆழமான பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் உள்ள திறந்தவெளி கிணறுகளை கம்பி வலைகள் வைத்து மூடவேண்டும்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீச்சல் தெரியாத மாணவ, மாணவிகள் ஈரோடு வஉசி பூங்கா நீச்சல் குளம் மற்றும் தனியாா் பயிற்சி மையங்களுக்கு சென்று நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். நீா்நிலைகளில் நீச்சல் பழகுபவா்கள் பெரியவா்கள் முன்னிலையில் நீச்சல் அடித்து பழகலாம். மாணவ, மாணவிகள் நீச்சல் பயிற்சி மையங்களுக்கு சென்று இந்த கோடைக் காலத்தை பயன் உள்ளதாக மாற்ற வேண்டும்.
பொது இடங்களில் குப்பைகளை போட்டு தீ வைக்கக்கூடாது. மேலும் விவசாய நிலங்களில் கிடக்கும் சருகுகளுக்கும் தீ வைக்க வேண்டாம். கோடைக் காலம் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாது. அருகில் இருக்கும் விவசாய தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளில் தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.
இந்த மாதம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவமனை, கல்லூரிகள், பள்ளிகள் தொழிற்சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே தீயினால் ஏற்படும் விபத்துகளை தவிா்க்க முடியும்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 64 போ் நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். நீா்நிலைகளில் மூழ்கியவா்களை காப்பாற்றுவது மிகவும் கடினமானது. நீரில் மூழ்கி சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விடுவா். இதனால் பெற்றோா்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் எங்கு செல்கின்றனா் என்பதை தொடா்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றாா்.