பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பிரதானம், மத்திய மற்றும் முறியன் என மூன்று அடுக்குகளைக் கொண்டது. இதில், மத்திய மற்றும் முறியன் அடுக்குப் பகுதியில் அதிக அளவில் தேங்கிக் காணப்படும் மணல் எடுக்கப்பட்டு கரையோரத்தில் விற்பனைக்காக குவித்துவைக்கப்பட்டுள்ளது.
அந்த மணல் இரவு நேரத்தில் வாகனங்கள் மூலமாக விற்பனைக்காக கடத்திச் செல்லப்படுகிறது. இயற்கையாக கிடைக்கும் ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு உள்ளதால், கள்ளத்தனமாக ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மணல் அதிக விலைக்கு கட்டுமானப் பணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அணைக்கட்டு பகுதி மட்டுமின்றி, பரவலாக பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தல் துணிகரமாக நடைபெறுவதாக குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தலைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.