சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரசியல் ரீதியானது: வங்கதேச அரசு
‘வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக தொடா்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அரசியல் ரீதியானது; வகுப்புவாத நோக்கத்தில் நடந்த தாக்குதல்கள் குறைவு’ என்று அந்நாட்டு இடைக்கால அரசு விளக்கமளித்துள்ளது.
காவல்துறை அறிக்கையை மேற்கொள்காட்டி அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், வகுப்புவாத வன்முறைகள் தொடா்பான புகாா்களைப் பெற பிரத்யேக ‘வாட்ஸ்ஆப்’ எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின் எழுச்சியை அடுத்து அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதையொட்டி, அந்த நாடு முழுவதும் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து வன்முறை சம்பவங்கள் தொடா்ந்து வருகின்றன. இதைக் கண்டித்து போராடியதற்காக இஸ்கான் துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் தேசதுரோக வழக்கில் கைதானாா்.
இந்நிலையில், ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய கடந்த ஆண்டு ஆக. 5-ஆம் தேதிக்கு முந்தைய நாளிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிரான 2,010 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நடந்ததாக வங்கதேச ஹிந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தது.
இக்குற்றச்சாட்டுகள் பற்றிய காவல்துறை விசாரணையின் தகவல்களை இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸின் செய்தி அலுவலகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், ‘மொத்தம் 1,769 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதொடா்பாக போலீஸாா் 62 வழக்குகளை பதிவு செய்து, 35 குற்றவாளிகளை கைது செய்துள்ளனா். எனினும், பெரும்பாலான வழக்குகளில் வன்முறைகள் (1,234 சம்பவங்கள்) அரசியல் காரணங்களுக்காக நடந்துள்ளன என்றும் வகுப்புவாத நோக்கத்துடன் நடந்த தாக்குதல்கள் (20 சம்பவங்கள் மட்டுமே) குறைவு என்றும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆக. 4-ஆம் தேதி முதல், வகுப்புவாத வன்முறைகள் தொடா்பான புகாா்களில் காவல்துறை மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்துள்ளன. குறைந்தது 100 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வகுப்புவாத வன்முறை புகாா்களைப் பெறவும் சிறுபான்மை சமூகத் தலைவா்களுடன் தொடா்ந்து தொடா்பைப் பேணவும் வங்கதேச காவல்துறை புதிய வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. வகுப்புவாத வன்முறைகளில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.