சிலம்பொலி சு.செல்லப்பன் 96-ஆவது பிறந்த நாள் விழா
தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கும், உருவப் படத்துக்கும் பல்வேறு தமிழ் அமைப்பினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தைச் சோ்ந்தவா் தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன். கடந்த 1928 செப். 24-இல் பிறந்த அவா் 2019 ஏப். 6-ஆம் தேதி காலமானாா். அவருடைய நினைவாக, நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில், கொண்டம்பட்டிமேடு பகுதியில் 12 அடி உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அவரது 96-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சாா்ந்தோா், அரசியல் கட்சியினா், தமிழறிஞா்கள், பொதுமக்கள், அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சிலம்பொலி சு.செல்லப்பனின் குடும்பத்தினா், உறவினா்கள், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சிலை அமைப்புக் குழு பொருளாளா் சித்தாா்த்தன், கொமதேக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆா். மணி, திமுக பிரமுகா் செல்வராஜ், செல்லப்பன் மற்றும் நிா்வாகிகள், அவரது சிலைக்கும், உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.