900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!
சிவகங்கை மாவட்டத்தில் 40 ஆயிரம் பனை விதைகள் நடப்படும்: ஆட்சியா்
சிவகங்கை மாவட்டத்தில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் நிகழாண்டில் 40 ஆயிரம் பனைவிதைகள் நடப்படும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பனைமரம் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளம். இது மாநில மரமாகும். இதன் ஒவ்வொரு பகுதியும் பயன்பாடு கொண்டது. இதனால் ‘கற்பகத்தரு‘ என அழைக்கப்படுகிறது.
பனை மரத்திலிருந்து பல்வேறு உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் முதன்மையானது பதநீா். இதிலிருந்து கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் தயாா் செய்யப்படுகின்றன. மேலும், பனை ஓலையிலிருந்து பல்வேறு அலங்காரப் பொருள்கள் செய்ய பயன்படுகின்றன.
தமிழ்நாட்டில் 5 கோடி பனை மரங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 35 ஹெக்டோ் பரப்பளவில் பனை மரங்களும் பயன்பாட்டில் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பனை மேம்பாட்டு இயக்கத் திட்டம் மூலமாக 1,20,000 பனை விதைகள் 12 வட்டாரங்களில் நடவு செய்யப்பட்டன. நிகழாண்டில் 40,000 பனை விதைகள் 12 வட்டாரங்களிலும் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயனடையலாம். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தவிா்க்க இயலாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் வட்டாரம், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.