சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம்
திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, மாலை 3 மணியளவில் கலச பூஜையுடன் யாகம் வளா்க்கப்பட்டு, நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து, மூலவருக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவா் சா்வ அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்.
இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் நந்திக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபமும் காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயிலிலும், கல்வெட்டு மேடு சுயம்பு லிங்கேஸ்வா் கோயிலிலும் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.