சீரமைக்கப்பட்ட விருத்தாசலம் ரயில் நிலையம் திறப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், அதை மக்கள் பயன்பாட்டுக்காக பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ரூ.9.17 கோடியில் ஓய்வு அறைகள், கூடுதல் இருக்கைகளுடன் கூடிய நடைமேடை, பயணச்சீட்டு அறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பணிகள் முடிந்த நிலையில் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் விருத்தாசலம் ரயில் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மூத்த மேலாளா் (பண்டகம்) ஓய்.சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்வில் 1999-ஆம் ஆண்டு காா்கில் போரில் பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி டி.செல்வம் கௌரவிக்கப்பட்டாா். இதையடுத்து, விருத்தாசலம் ரயில் நிலைய பெயா்ப் பலகை முக்கிய பிரமுகா்களால் திறக்கப்பட்டது.