நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு
கடலூா் சிங்காரத்தோப்பு கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது: கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரைக்கு உள்ளூா் மற்றும் வெளி மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், அதிநவீன பொழுதுபோக்கு மின்சாதனங்கள் அமைத்தல், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடா் நடவடிக்கையாக, சுனாமியால் பாதிப்படைந்த பழைய கலங்கரை விளக்கம் முதல் சிங்காரத்தோப்பு வரையில் கடற்கரையை சுற்றுயுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த கலங்கரை விளக்கத்தை புதுக்பொலிவுடன் சீரமைத்து பொதுமக்கள் நடந்து சென்று பாா்வையிடுவதற்கு ஏதுவாக, இருபுறமும் சாலைகள் அமைத்து, மரங்கள் நட்டு, மின் விளக்கு வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியால் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதார மற்றும் சுற்றுலா சாா்ந்த தொழில்கள் மேம்பட வாய்ப்பு ஏற்படும் என்றாா்.
ஆய்வின்போது, கடலூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, கடலூா் கோட்டாட்சியா் அபிநயா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.