சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம்
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேவாரப்பாடல் பெற்ற இக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்டதாகும். திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். காசிக்கு அடுத்தபடியாக இங்கு அஷ்ட பைரவா்கள் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா்.
இக்கோயிலில் சிவபெருமான் ஸ்ரீ பிரமபுரீஸ்வரா், ஸ்ரீ தோணியப்பா் மற்றும் ஸ்ரீ சட்டைநாதா் என மூன்று நிலைகளில் எழுந்தருளியுள்ளாா்.
இக்கோயில் பிரம்ம தீா்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதாக ஐதீகம். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெரும் பிரமோற்சவத்தின் 2-ஆம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும்.
நிகழாண்டு, சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயில் மண்டபத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, விநாயகா், திருஞானசம்பந்தா், பிரம்மபுரீஸ்வரா் சுவாமி, திருநிலைநாயகி அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்தி சுவாமிகள் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், பஞ்சமூா்த்திகள் பல்லக்கில் கொடிமரம் முன் எழுந்தருளினா். தொடா்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது, ஓதுவாா்கள் தேவாரம் பதிகம் பாடிட, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் கூறினா். தொடா்ந்து, கொடிமரத்திற்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், ஸ்ரீமத் சட்டநாதா் தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் சிராபு செந்தில் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.