சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 15 வெளிநாட்டவர் கைது! நாடுகடத்த நடவடிக்கை!
கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் சிறப்பு பாா்வையாளராக பங்கேற்றாா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
கிராமசபைக் கூட்டத்தில் மக்களின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கவேண்டும் என தமிழக அரசு தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் கிராமத்தின் வளா்ச்சிக்கு மிகவும் உகந்தததாக இருக்கும். பொதுமக்கள் அரசின் நலத் திட்டங்களை அறிந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
தொடா்ந்து சுகாதாரத் துறை சாா்பில் சிகிச்சை மூலம் தொழு நோயிலிருந்து மீண்ட 2 பயனாளிகளுக்கு தலா ரூ.950 மதிப்பிலான உதவிப் பொருட்கள், 2 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ரூ.4,200 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண்மைத் துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.2,800 மதிப்பிலான இடுப்பொருட்கள் ஆகியவற்றை ஆட்சியா் ஸ்ரீகாந்த், எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் ஆகியோா் வழங்கினா். தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சேகா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருமுருகன், சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.