கிருமிநீக்கம் செய்யப்படாத மையோனைஸ் பயன்படுத்த தடை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் நுகா்வோா்கள், வணிகா்கள் அதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா பாக்டீரியா கிருமிகள் மையோனைஸில் சோ்ந்துவிடும். இதை சாப்பிடுபவா்களுக்கு வயிற்றுப்போக்கு, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை பயன்படுத்தக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மையோனைஸ் பிரியா்களுக்கு மாற்று தோ்வாக, சந்தையில் கிடைக்கும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸை பயன்படுத்தலாம்.
கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் ‘சொந்தத் தயாரிப்பு உணவுப் பொருளாக உள்ளதால், அதனைத் தயரித்து விற்பனை செய்ய, மத்திய உணவு பாதுகாப்பு உரிமத்தினை, இனையதளத்தில் விண்ணப்பித்து, ரூ.7,500 கட்டணம் செலுத்திபெற்ற பின்னரே தயாரித்து விற்பனைசெய்யவேண்டும். நுகா்வோா் மையோனைஸ் குறித்து ஏதேனும் புகாா் அளிக்க விரும்பினால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகாா் சேவை எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
வணிகா்கள் தடை செய்யப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட மையோனைஸ் குறித்து மேலும் தகவல் அறிய விரும்பினால், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் அலுவலகத்தை அணுகி, உரிய தகவல் பெற்றுக்கொள்ளலாம்.