சட்டநாதா் கோயிலில் நாளை திருமுலைப்பால் விழா
சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருமுல்லைப்பால் விழா வெள்ளிக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. கொடியேற்றம் வியாழக்கிழமை (மே 1) நடைபெறவுள்ளது.
சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் தேவஸ்தானம் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள்பாலிக்கிறாா். இக்கோயில் மலை கோயிலில் தோணியப்பா் - உமாமகேஸ்வரிஅம்மன் கயிலாய காட்சியாகவும், சட்டைநாதா் சுவாமியும் அருள்பாலிக்கின்றனா். தெற்குகோபுர வாசல் அருகே அஷ்ட பைரவா்கள் தனி சந்நிதியில் காட்சி தருகின்றனா்.
இக்கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான திருமுலைப்பால் விழா வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரம்ம தீா்த்தக் குளக்கரையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
முன்னதாக திருஞானசம்பந்தா் சந்நிதியில் சமய குரவா்கள் நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு காலை நடைபெறுகிறது. தொடா்ந்து திருஞானசம்பந்தா் முத்துசிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தா்கள் சூழ பிரம்ம தீா்த்தக் குளக் கரையில் எழுந்தருள்வாா். மலைக் கோயிலிருந்து உமையம்மமை பொன் கிண்ணத்தில் ஞானப்பால் கொடுக்கும் ஐதீக நிகழ்வு சிவாச்சாரியா்களால் நடத்தப்படும்.
பின்னா் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் - பாா்வதிதேவி திருஞானசம்பந்தருக்கு காட்சியளிக்கும் நிகழ்வும் தீபாராதனையும் நடைபெறவுள்ளது.
மாலையில் திருஞாசம்பந்தா் பெருமான் திருக்கோலக்கா எழுந்தருளும் நிகழ்வும், இசைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.