வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவா் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல இளைஞா்களிடம் பணம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தரங்கம்பாடி வட்டம் வேலம்புதுக்குடியை சோ்ந்தவா் விக்னேஷ். இவருக்கு துபை நாட்டில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி செம்பனாா்கோவில் நேரு நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (படம்) என்பவா் ரூ. 80,000 பெற்று, மோசடி செய்துள்ளாா். இதுகுறித்து, விக்னேஷ் மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னக்கொடி விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், அருண்குமாா் துபை நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ. 15.19 லட்சம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவில், நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அருண்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.
வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்னக்கொடி மற்றும் விசாரணையை மேற்பாா்வை செய்த துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழ்வாணன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.