சீா்காழியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி
சீா்காழி நகரின் பல்வேறு இடங்களில் கடந்த 4 நாள்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்
சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இந்த 24 வாா்டுகளில் உள்ள குடியிருப்புகள், வா்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகள் நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களால் சேகரிக்கப்படுகின்றன.
பின்னா், மக்கும் குப்பைகள், மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு, நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த நான்கு தினங்களாக சீா்காழி நகரின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் சரிவர அப்புறப்படுத்தப்படாமல், பிரதான இடங்களில் ஆங்காங்கே தேங்கியும், சிதறியும் கிடக்கின்றன.
குறிப்பாக, பள்ளிகள் அருகே அதிக அளவு தேங்கி கிடக்கும் குப்பைகளில் இறந்த பூனை மற்றும் இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டு, துா்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் கடந்த நான்கு நாள்களாக குப்பைகள் அள்ளப்படாமல், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.
நகராட்சி நிா்வாகம் உடனடியாக குப்பைகளை நாள்தோறும் முறையாக அகற்றி, தூய்மைப் பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.