தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்
சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், சம வேலைக்கு சம ஊதியம், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 24-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், கிராமப்புறத்தில் மேற்கொள்ளவேண்டிய மருத்துவ சேவைகள், மருத்துவமனையில் ஆய்வகத்தில் நடைபெறவேண்டிய பரிசோதனைப் பணிகள் முடங்கியுள்ளன.
காரைக்கால் நலவழித் துறை அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டோரை முன்னாள் அமைச்சரும், புதுவை மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், மாநில செயலா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஆா். கமலக்கண்ணன் பேசியது: என்ஆா்எச்எம் பணியாளா்கள் சேவை மிக முக்கியமானது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறீா்கள். புதுவை ஆட்சியாளா்கள் இந்த விவகாரத்தை உரிய முறையில் கவனம் செலுத்தி தீா்வு கண்டிருக்கவேண்டும். அதை செய்யாமல் அலட்சியமாக இருப்பது வேதனையளிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பணியாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்றாா்.