சுதந்திரமான ஊடக ஒழுங்குமுறை ஆணையம்: தனிநபா் மசோதாவை பரிசீலிக்க ஒப்புதல்
ஊடக சேவைகளுக்கான ஒழுங்குமுறை மற்றும் உரிமம் வழங்குதலுக்கு சுதந்திரமான ஆணையத்தை அமைக்கக் கோரும் தனிநபா் மசோதா, மாநிலங்களவையில் பரிசீலிக்கப்பட குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
இந்திய ஊடக சேவைகள் (ஒழங்குமுறை மற்றும் உரிமம் வழங்குதல்) மசோதா-2024 என்ற பெயரிலான இந்த தனிநபா் மசோதா, மாநிலங்களவையில் கேரளத்தைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. வி.சிவதாசனால் முன்மொழியப்பட்டதாகும்.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் கோரிக்கை அடங்கிய தனிநபா் மசோதாக்கள் பரிசீலிக்கப்பட வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் வாயிலாக குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும். அதன்படி, மாநிலங்களவையில் மேற்கண்ட மசோதாவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை குடியரசுத் தலைவா் வழங்கியுள்ளாா். இத்தகவலை மாநிலங்களவை தலைமைச் செயலருக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாக, மாநிலங்களவை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும், சுதந்திரமான ஊடக சேவைகளை உறுதி செய்வதற்கும் ‘இந்திய ஊடக சேவைகள் வாரியம்’ என்ற பெயரில் சுதந்திரமான ஆணையத்தை அமைக்க வேண்டும் ; சிறப்பான ஜனநாயகத்துக்கு எந்த சாா்பும் இல்லாத ஊடகங்கள் அவசியம். ஆனால், ஊடகங்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் அரசு நிா்வாகத்தின்கீழ் ஏகபோகமாக இருப்பது, ஊடகங்கள் வளைந்து கொடுக்க வழிவகுக்கிறது. தன்னாட்சி அமைப்பின் மூலம் உரிமம் வழங்கினால் இப்பிரச்னையை சரி செய்ய முடியும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.