சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்! அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளர் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனும் இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது சுதர்சன் ரெட்டி அமர்வு வழங்கிய ‘சல்வா ஜூடும்’ வழக்கின் தீர்ப்பை மேற்கோள்காட்டி, அவரை நக்சல் ஆதரவாளர் என்று கடந்த வாரம் அமித் ஷா விமர்சித்திருந்தார்.
இந்த விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், அபய் ஓகா, கோபால கெளடா, விக்ரம்ஜித் சென், குரியன் ஜோசப், மதன் பி. லோகூர், ஜே. செலமேஸ்வர் உள்பட 18 நீதிபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”சல்வா ஜூடும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தவறாக புரிந்துகொண்டது துரதிர்ஷ்டவசமானது.
இந்த தீர்ப்பு வெளிப்படையாகவும் அல்லது எவ்விதத்திலும் நக்சல் மற்றும் அதன் சித்தாந்தத்தை ஆதரிக்கவில்லை.
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான பிரசாரம் சித்தாந்த ரீதியாக இருக்கலாம், ஆனால் அதை நாகரிகமாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும். இரு வேட்பாளர்களின் சித்தாந்தத்தை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாரபட்சமாக தவறாகப் புரிந்துகொள்வது, நீதித்துறையின் சுதந்திரத்தையே உலுக்கி எடுக்கும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஒருவித அச்சத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
குடியரசு துணைத் தலைவரின் பதவிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவதூறுகளைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
