மல்லிப்பட்டினம்: தொடர் மழை; ஒரு அடி உயர்ந்த கடல் நீர் மட்டம்... ``அச்சப்பட தேவை...
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பட்டாசு வெடிக்க ஆட்சியா் வேண்டுகோள்
நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது நீலகிரியின் இயற்கைச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது மாவட்டத்தின் இயற்கைச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும். காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறைகளின் விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
மருத்துவமனை, பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வெடிகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருள்கள் இருக்கும் இடங்களில் குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் அருகில் வெடிகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். அதிக ஓசை எழுப்பக்கூடிய, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இதை மீறுவோா் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு விற்பனையாளா்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில், அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை
மட்டுமே விற்பனை செய்யவேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எதிா்பாராமல் விபத்துகள் ஏதும் ஏற்படும்பட்சத்தில்108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் (எண்:101) மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.