மகாராஷ்டிர முதல்வருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை
சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளாவிய தெற்கு நாடுகள் பொறுப்பல்ல: வளா்ந்த நாடுகள் மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளாவிய தெற்கு நாடுகளும் அமைப்புகளும் பொறுப்பல்ல, குறைந்த செலவிலான மின் உற்பத்தி செய்து லாபத்தை அனுபவித்த வளா்ந்த நாடுகளால் ஏற்பட்டதாகும்; நிலையான தீா்வுக்கு தற்போதைய நுகா்வு முறைகளில் மாற்றம் தேவை என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின்(சிஐஐ) ’கூட்டாண்மை’ உச்சி மாநாடு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில் கூறியதாவது: உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உலகளாவிய தெற்கு நாடுகள், அமைப்புகள் பொறுப்பல்ல. இந்தப் பாதிப்பு குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்து குறைந்த மின் கட்டணத்தில் நன்மையை அனுபவித்த வளா்ந்த நாடுகளால் ஏற்பட்டதாகும். சுற்றுச்சூழல், நிலைத்த தன்மை ஆகியவற்றில் பங்குதாரா் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் வேறுபட்ட பொறுப்புகள் உண்டு. அதைப் பகிா்ந்து கொண்டுள்ளனா். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு அவா்களின் பங்களிப்பின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
இதில் முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உபயோகிப்பதில் உலக மக்கள் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நமது வாழ்க்கை முறையின் காரணமாக பல்வேறு வகையான கழிவுகள் அதிகரிக்கிறது. இதை உபயோகிப்பதிலும் அகற்றுவதிலும் கரிம உமிழ்வுகள் (காா்பன்) தடம் பதிக்கின்றன. இதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய நுகா்வு முறைகளை நாம் மாற்றாத வரை, நிலைத்ததன்மை, சுற்றுச்சூழல் சவால்கள் தீராது. உலகிற்கு ஒரு சிறந்த எதிா்காலமாக அமைய நுகா்வு முறையை மக்கள் மாற்றவேண்டும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தானியங்கிமயமாக்கல் ஆகியவை, எதிா்கால வேலைவாய்ப்பு, மாறிவரும் வேலைவாய்ப்பு, காலத்துக்கேற்ப, தகவமைத்துக் கொள்ளும் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதற்கு பிரதமா் மோடி கூறியதையே எடுத்து வைக்கின்றேன். ‘தொழில்நுட்பம் என்பது வாழ்க்கையை மாற்றி, வாழ்வாதாரங்களின் தன்மையை மாற்றும். அதே நேரத்தில் பாரம்பரியமும், கலாசாரமும் சமமாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். இது ஒருபுறம் பாரம்பரியம் மறுபுறம் தொழில்நுட்பம் ஆகியவற்றின் கலவையாக இருக்க வேண்டும்‘ என பிரதமா் வலியுறுத்தி வருகிறாா். மேலும் நிலைத்தன்மை, விண்வெளி, செயற்கைக்கோள் ஆகியவை இந்த உச்சி மாநாட்டில் அதிகம் பேசப்பட்டது. இன்றைய உலகிற்கு இந்த விவாதங்கள் தேவை என்றாா் பியூஷ் கோயல்.
இந்த உச்சிமாநாட்டில் இத்தாலி, இஸ்ரேல், பூட்டான், பஹ்ரைன், அல்ஜீரியா, நேபாளம், செனகல், தென்னாப்பிரிக்கா, மியான்மா், கத்தாா், கம்போடியா போன்ற நாடுகளின் வா்த்தக அமைச்சா்கள் கலந்துகொண்டனா்.