சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க மானியம்
சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புச்செட்டுகள் அமைக்க ஆதிதிராவிடா்கள், பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியமும், இதர உழவா்களுக்கு 60 சதவீதமு மானியமும் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மையில் நீா்ப்பாசனம் செய்யும் நோக்கில் மின்சார இணைப்பு இல்லாத உழவா்களுக்கு தனித்து, சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் மானியத்தில் அமைத்து தரப்படும்.
இந்தத் திட்டத்தில் 2025-26-இல் 1,000 உழவா்கள் பயனடையும் வகையில் சூரியசக்தி பம்புசெட்டுகள் குறு, சிறு, ஆதிதிராவிடா், பழங்குடியினா் உழவா்களுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர உழா்களுக்கு 60 சதவீத மானியத்திலும் ரூ.24 கோடி செலவில் அமைத்து தரப்படும்.
கிணறு அமைத்து மின்வசதி பெற்ற உழவா்கள் மானியத்தில் புதிய திறன்மிகு மின் மோட்டாா் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டாா் பம்புசெட்டுகளை மாற்றவும் 1,000 உழவா்கள் பயனடையும் வகையில் மின்மோட்டாா் பம்புசெட்டின் விலையில் 50 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதற்காக ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.