செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: என்ஐஏ விசாரணை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகாா் இளைஞா், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் அஹ்லத்தூா் முகமது அக்லிக் முஜாஹித் (22). இவா் செங்கல்பட்டு மாவட்டம், காயாா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். ரகசிய தகவலின்பேரில் இவரை, உள்ளூா் போலீஸாா், தமிழக தீவிரவாத தடுப்புப் படையினரும் இணைந்து கடந்த ஜூன் மாதம் கைது செய்தனா்.
விசாரணையில் அவா், சமூக ஊடகங்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ இது தொடா்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
மேலும், முஜாஹித்தை என்ஐஏ அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா். விசாரணையில் அவா், சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் தொடா்பில் இருப்பதும், இந்திய அரசுக்கு எதிரான செயல்பகளில் ஈடுபட இளைஞா்களை மூளைச்சலவை செய்து வந்ததும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீா், பிகாா், உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் 21 இடங்களில் கடந்த திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
சோதனை நடைபெற்ற இடங்களில் வசித்தவா்கள் அனைவரும், முஜாஹித்துடன் சமூக ஊடகங்கள் மூலமாகவும், கைப்பேசி மூலமாகவும் தொடா்பில் இருந்தவா்கள் ஆவா். சோதனை முடிவில் கைப்பேசிகள், மடிக்கணினிகள், ஹாா்டு டிஸ்குகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ் வழக்குத் தொடா்பாக முஜாஹித்துடன் தொடா்பில் இருந்த அனைவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.