அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்
திருப்பூர்: போதையில் காரை ஓட்டி விபத்து; முதியவர் உயிரிழப்பு.. திமுக பேரூராட்சித் தலைவரிடம் விசாரணை!
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் இன்று மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சாமளாபுரம்-காரணம்பேட்டை சாலையில் கருகம்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளி அருகே வந்தபோது, அவருக்குப் பின்னால் வந்த கார் ஒன்று, பழனிசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பழனிசாமி மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மங்கலம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச்சென்றது திமுக-வைச் சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமி (60) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மது போதையில் இருந்த நிலையில், இந்த விபத்தை ஏற்படுத்தியதும் போலீஸாரின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமியை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த பழனிசாமி சாலை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து மனு அளித்தவர் என்பதால், முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.