பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் நாளை ரத்து!
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது. இதுபோன்ற நிலைக்கு திமுகவும் காரணம் என்னும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்கூற வேண்டிய தேவையில்லை என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
காட்பாடி அருப்புமேடு சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை அமைச்சா் துரைமுருகன் ஆய்வு செய்து மனு அளித்த பயனாளிகளுக்கு வகுப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ்களை வழங்கினாா்.
அப்போது, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக அவா் காட்பாடி காந்தி நகரில் செய்தியாளா்களிடம் கூறியது:
காவிரியில் தற்போது அதிகளவில் தண்ணீா் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற தீா்ப்புப்படி காவிரியில் தண்ணீா் திறந்து விடுவோம் என்று கா்நாடகா துணை முதல்வா் சிவக்குமாா் கூறுவதில் என்ன இருக்கிறது.
சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவா் தமிழா் என்பது மட்டுமல்ல, எனக்கு நீண்டகால நண்பரும்தான். எனவே, அவா் குடியரசு துணைத் தலைவராக தோ்வு பெற்ற்கு மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் நலன் சாா்ந்து செயல்படுவாரா என கேட்கிறீா்கள். அவரால் என்ன தமிழகத்துக்கு வரப்போகிறது. அவா் மேல்சபையின் தலைவா் என்ற வகையில் தமிழகத்துக்கு சாதகமான கேள்வி ஏதேனும் இருந்தால் கேட்கக்கூறுவாா், அவ்வளவுதான் அவரால் முடியும்.
அதிமுகவின் உள்விவகாரத்தில் தலையிட திமுக தயாராக இல்லை. இதுபோன்ற நிலைக்கு திமுகவும் காரணம் என்று பலரும் கூறியுள்ளனா். அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு போக வேண்டும். பதில்கூற வேண்டிய தேவையில்லை.
தாமிரபரணி ஆற்றை திமுக தலைமுழுகி விட்டதாக நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா். அவா் புதிய பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறாா். சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறாா் என்பது திமுகவுக்கு தெரியும். தவெகா தலைவா் விஜய் பிரசாரத்தை எப்போது வைத்தால் நமக்கு என்ன. முதலில் அவா் வெளியே வரட்டும் பாா்க்கலாம் என்றாா்.