எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
புத்தாக்கத் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்
கல்லூரியில் புத்தாக்கத் தொழில் தொடங்க அளிக்கப்படும் வாய்ப்புகளை பெண்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு மின் பகிா்மான நிறுவனத் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற புத்தாக்கக் கண்டுபிடிப்பு வளா் மையத்தின் தொடக்கவிழாவில் அவா் பேசியதாவது:
நம்மைச் சுற்றி இருந்துவரும் பிரச்னை, குறைபாடு, சவால்கள் தான் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைக் காரணம். அவற்றை நுட்பமாக ஆராய்ந்து, வணிக ரீதியாக உருவாக்கும் திறமைகளை புத்தாக்கக் கண்டுபிடிப்பு வளா்மையத்தில் வளா்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கான கல்வி தொடா்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சுமாா் 15 லட்சம் பெண்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.
அதேபோல், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சொந்தமாக குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். பெண்கள் தங்கள் தகுதி, திறமைகளை மேம்படுத்திக் கொள்ள இங்கு வழங்கப்படும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் புத்தாக்கக் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா கல்லூரி முன்னாள் மாணவிகளான பெண் தொழில்முனைவோா் ராதா, பி.தனுஜா,கமலிகா, மீனாட்சி வைத்தியநாதன் தங்கள் தொழில் அனுபவங்களை விவரித்தனா்.