-26 டிகிரி குளிர், பலத்த காற்று வீச்சுகளுக்கிடையே கோல் அடித்த மெஸ்ஸி..! 2025இன் ...
செஞ்சி: `காசிருந்தா கழிவறையைப் பயன்படுத்துங்க..' - பொது கழிவறையில் கட்டண `அடாவடி!'
செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என செஞ்சி பேருந்து நிலையத்துக்கு வரும் பெரும்பாலானோர் கட்டண கழிவறையையே பயன்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.
செஞ்சியில் மிகப் பிரபலமான சுற்றுலா தளமான செஞ்சி கோட்டை அமைந்துள்ளது .செஞ்சி கோட்டையைப் பார்வையிடுவதற்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செஞ்சி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிலையம் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதோடு, அவர்கள் மற்ற ஊர்களுக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்வதற்கு இங்கு சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது.

இவ்வாறு காத்திருக்கும் பொதுமக்கள் தங்களின் அவசர நேரத்தில் பொது கழிவறை இல்லாததால், கட்டண கழிவறையைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாட பேருந்து வசதிக்கு மட்டுமே பணம் எடுத்து வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதனால் மிகவும் அவதிப்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். மேலும் செஞ்சி பேருந்து நிலையத்திற்கு வரும் சிலர் கட்டண கழிவறைக்குப் பணம் இல்லாமல் அப்பகுதிக்கு அருகில் இருக்கும் மறைவான இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டுச் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. கூடுதலாக விசாரித்த பிறகே தெரிந்தது, தற்போது கட்டண கழிப்பறை எனப் பலகை வைத்து பணம் வசூலிப்பது பொது கழிப்பறை என. மேலும் கடந்த சில மாதங்களாகவே இவ்வாறு தான் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது.

இது குறித்து விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் கேட்டபோது, "நான் பணியில் வந்து சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகிறது. நான் என்ன குற்றச்சாட்டு என விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்கிறேன்" எனக் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் பேசி முடித்த ஐந்து நிமிடங்களிலேயே, செஞ்சி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து நம்மைத் தொடர்புகொண்டு பேசிய அலுவலர் ஒருவர், "செஞ்சி பேருந்து நிலையத்தில் இரண்டு கழிவறைகள் உள்ளது. ஒன்றில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பூட்டி இருக்கிறது. மற்றொன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டண கழிவறையில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அங்குள்ள பொருள்களும், கட்டண கழிவறை என்ற பலகையும் பொது கழிவறையில் இருக்கும் இடத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அதனைக் கட்டண கழிவறை எனத் தவறாக எண்ணுகிறார்கள். ஆனால் அது பொதுக் கழிப்பிடமே. அங்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. அவ்வாறு கட்டணம் வசூலித்தாலும் அது தவறு. கட்டண கழிப்பறையில் கட்டுமான பணி முடிந்த பிறகு பொருள்கள் அனைத்தும் மாற்றி வைக்கப்படும்" எனக் கூறினார்.
இவர் பேசிய அன்றே மீண்டும் செஞ்சி பேருந்து நிலையத்திற்குச் சென்றோம். கட்டண கழிவறை என்ற பலகை வைத்து வெளியே மேசை போட்டு, கட்டணம் தற்போது வரை வசூலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவற்றைப் பார்த்தால் குறுகிய காலத்தில் கட்டுமான பணிக்காகப் பொருள்களை மாற்றி வைத்ததாகத் தெரியவில்லை. வெகு நாள்களாகவே கட்டண கழிப்பறை என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதாகத் தெரிகிறது. மேலும் பொதுமக்கள் இவற்றைப் பற்றி பணம் வசூலிப்பவரிடம் கேட்டபோது, "கான்ட்ராக்ட்டில் இந்த கழிவறையினை நடத்துகிறோம். எனவே பணம் வசூலிக்கத்தான் செய்வோம். வேண்டுமென்றால் கழிவறையை உபயோகப்படுத்துங்கள். இல்லையெனில் சென்றுவிடுங்கள்" என அலட்சியமாகப் பதில் கூறுகிறார்.
எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தானின் வீடு செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளித்தான் உள்ளது. ஆனாலும் இந்த அவல நிலை, அஞ்சுகம் அம்மாள் நினைவு பேருந்து நிலையத்திற்கு ஏற்பட்டுள்ளது.