Vijay: ``விஜய் தனியாக `CBSE' பள்ளி நடத்துகிறார், அதில் இந்தி...'' -பாஜக அண்ணாமலை கேள்வி
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் 'த.வெ.க' தலைவர் விஜய், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையையும், இந்தித் திணிப்பையும் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசியிருக்கும் தமிழக 'பா.ஜ.க' தலைவர் அண்ணாமலை, "தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இங்கு அதிகம். இதில், 'சிபிஎஸ்இ'யில் படிக்கும் மாணவர்கள் இந்தி படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ் கட்டாய மொழியாக இல்லை. தனியார் பள்ளி மாணவர்கள் அதிகமாக இந்தி படிக்கிறார்கள். அப்படியிருக்க இந்தியை ஏன் எதிர்க்க வேண்டும்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் 'தமிழக வெற்றிக் கழக' தலைவர் விஜய், 'விஜய் வித்யாஷ்ரம்' என்ற பெயரில் தனியாக 'சி.பி.எஸ்.சி' பள்ளியை நடத்துகிறார். அந்தப் பள்ளியின் இடம் 'சி.ஜோசப் விஜய்' பெயரில் இருக்கிறது. அந்த இடத்தை 2017ம் ஆண்டிலிருந்து 35 ஆண்டுகளுக்கு 'எஸ்.ஏ. சந்திரசேகர்' பெயரில் இருக்கும் அறக்கட்டளைக்கு விஜய் லீஸுக்குக் கொடுத்திருக்கிறார். அது 'சி.பி.எஸ்.சி' பள்ளி, அதில் இந்தி இருக்கிறது.
அமைச்சர் அன்பில் மகேஷின் குழந்தைகள் பிரஞ்சு படிக்கிறார்கள். 'தி.மு.க'வின் கலாநிதி வீராசாமியும் தனியாக பள்ளி நடத்துகிறார். அவரது பள்ளியில் ஆங்கிலம்தான் முதன்மையான மொழி, தமிழ் கட்டாய மொழியில்லை. சீமான், '2016ம் ஆண்டு விருப்ப மொழியாக இந்தி அல்லது பிற மொழியைப் பயிலலாம்' என்று கூறியிருக்கிறார். இவர்கள்தான் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.
வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீடாகச் சென்று 'இந்தி வேண்டுமா, வேண்டாமா' என மக்களிடம் கருத்துக் கணிப்புக் கேட்டுக் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவிருக்கிறோம்." என்று பேசியிருக்கிறார்.