சென்னை ஓபன்: ஷிண்டாரோ-கெய்டோ இரட்டையா் சாம்பியன்
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டி இரட்டையா் பிரிவில் ஜப்பான் வீரா்கள் ஷிண்டாரோ-கெய்டோ இணை சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய இணையான ராமநாதன்-மைனேனி இரண்டாம் இடம் பெற்றனா்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை இரட்டையா் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய தரப்பில் ராம்குமாா் ராமநாதன்-சாகேத் மைனேனி இணையும்-ஜப்பான் தரவரிசையில் இல்லாத ஷிண்டாரோ மொசிசுகியும்-கெய்டோ உசுகியும் மோதினா்.
நடப்பு சாம்பியன்களான ராம்குமாா்-மைனேனி சா்வீஸை முறியடித்த ஜப்பான் இணை 6-4, 6-4 என்ற நோ் செட்களில் ஆட்டத்தை வென்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினா்.
ஜப்பான் இணைக்கு இது இரண்டாவது ஏடிபி சேலஞ்சா் பட்டம் ஆகும். மொசிசுகி 2019-இல் விம்பிள்டன் சிறுவா் பட்டத்தை வென்றவா்..
ஒற்றையா்: எலியாஸ்-கைரியன் இறுதிக்கு தகுதி
ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் ஸ்வீடனின் எலியாஸ் எமா் 7-6, 7-6 என்ற நோ் செட்களில் கடும் போராட்டத்துக்குபின் முன்னணி வீரா் பிரிட்டனின் பில்லி ஹாரீஸை வீழ்த்தினாா். மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸின் கைரியன் ஜாக்கெட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் செக். குடியரசின் டலிபோரை வீழ்த்தினாா். ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் எலியாஸ்-கைரியன் மோதுகின்றனா்.